கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு ஜிஎஸ்டி சாலையில் கழிவுநீரால் கடும் துர்நாற்றம்: மரண பள்ளத்தால் விபத்து அபாயம்
கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு ஜிஎஸ்டி சாலையில் திறந்து விடப்படும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஜிஎஸ்டி சாலையில் உள்ள மரண பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்படும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளும், இதேபோல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு ஜிஎஸ்டி சாலையில் திறந்து விடப்படும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், ஜிஎஸ்டி சாலையில் உள்ள மரண பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்படும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் மற்றும் விடுதி உள்ளது. இங்கிருந்து 300 மீட்டர் தூரம் வரை இரும்பு கம்பிகளால் சதுர வடிவில் சாலையோர கால்வாயில் மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பேருந்து நிலையம் மற்றும் தனியார் ஓட்டலில் இருந்து திறந்து விடப்படும் கழிவுநீர் மேற்படி கால்வாயில் வாழ்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவை நோக்கி செல்கிறது. இதில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பொது மக்கள் கழிவுநீரால் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துகொண்டு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
மேலும், இதில் மூடி போட்ட ஒரு இடத்தில் மரணம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் மரணம் பள்ளம் இருப்பது தெரியாமல் பைக்கில் செல்பவர்கள் மோதி விழுந்து எழுந்து செல்கின்றனர். இதனால், அந்த மரண பள்ளத்தில் மரக்கிளைகளை உடைத்து விபத்து ஏற்படாத வகையில் அதில் நடப்பட்டுள்ளன. இதில், கனரக வாகனங்கள் அரசு மற்றும் மாநகர பேருந்துகள் வேகமாக வரும்போது அந்த மரண பள்ளத்தில் டயர்கள் சிக்கிக்கொண்டால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.