டெல்லி: தெருநாய் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும். அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் கருத்தடை செய்யப்படுவதாகவும். இதற்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 10 மையங்களை கூடுதலாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் 96 மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தடை திட்டத்திற்கு 450 கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடை பல்கலைக்கழகங்கள் மூலம் 15 நாட்கள் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன். இது தவிர 500 உதவி மருத்துவர்களுக்கும் 500 உதவியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கால்நடை மருத்துவமனைகளும், மருத்துவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. 450நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாய்களுக்கு 72 காப்பகங்கள் உருவாக்க ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காக 2022-2023 நிதி ஆண்டு முதல் ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். இந்த ஆண்டு மட்டும் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நவம்பர் 4-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
