கதை ஒரு பக்கம்... கவர்ச்சி ஒரு பக்கம்... கோடியில வாங்குறாங்க... ஜிகுஜிகுன்னு ஆடுறாங்க... நடிகைகள் பற்றி செல்லூர் ராஜூ ஏக்கம்
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர், ‘‘நிருபர்களே... எங்க செய்திகளை போடவே மாட்டேங்கிறீங்களேப்பா? அன்னைக்கு மாடக்குளம் கண்மாயை பற்றி வரிந்து கட்டி சொல்கிறோம். நீங்க அங்கே வந்து விஜய்யை போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுட்டீங்க? சொன்னதைப் பத்தி செய்தியே வரல?
நீங்க மாடக்குளம் கண்மாயை பற்றி ஏதாவது போட்டீங்களா? எடிட் பண்ணிடுறீங்க. விழுந்து விழுந்து நாங்க செய்ய, நீங்க என்னடான்னா உங்களுக்கான கான்செப்ட்டுக்கு போயிடுறீங்க’’ என்றார். தொடர்ந்து அவர் கூறும்போது, ‘‘சினிமாவில், கதை ஒரு பக்கம், கவர்ச்சி டான்ஸ் ஒரு பக்கம் இருக்கும். நீங்கள்லாம் பார்க்கிறீங்களா, பார்க்கலியா? ஒரு நடிகை பாடலுக்கு டான்ஸ் ஆட அதிகளவில் தொகை கேட்கிறார். நடிகை தமன்னா ரூ.3 கோடி, நயன்தாரா ஒரு பாடலுக்கு ரூ.5 கோடி கேட்குறாங்க.
இப்படித்தான் நடிகையை ஆட விடுவது போல, ஜிகு ஜிகுன்னு வாக்குறுதிகள் தரப்படுகிறது’’ என்று கூறியவரிடம், ‘டிடிவி.தினகரன் பேசியது, கரூர் சம்பவம்?’ என அடுத்தடுத்து நிருபர்கள் கேள்விகள் கேட்டனர். ‘‘அதெல்லாம் வேணாம்பா. வேற இருக்கா? வாங்க, வாங்க’’ என்றபடி பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்தவர், ‘‘கரூர் எல்லாம் பேசிப் பேசி பழசாகிப் போச்சுப்பா, பொழுதன்னைக்கும் இதையே பண்ணாதீங்கப்பா...’’ என்றபடி கிளம்பிச் சென்றார்.