பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் சட்ட விரோதமாக மழைநீர் கால்வாயில் இணைக்கப்பட்டிருந்த 50 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. குன்றத்தூர் ஒன்றியம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதற்கிடையே பருவமழை தொடங்கிய நிலையில் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன் மற்றும் ஊராட்சி அலுவலர்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று மழைநீர் வடிகால்வாய்களை ஆய்வு செய்து வருகின்றனர். மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூர்வாரி அடைப்புகளை சரிசெய்து முறையாக மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த வாரம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்வாய்களை ஆய்வு செய்தபோது, தனியார் நிறுவனங்கள், குடியிருப்புவாசிகள் கழிவுநீர் இணைப்புகளை முறைகேடாக மழை நீர் கால்வாயில் இணைத்தது தெரியவந்தது. மேலும், வீடுகள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் இருந்தும் கழிவுநீர் மழை நீர் கால்வாயில் சட்ட விரோதமாக வெளியேற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மழைநீர் வடிகால்வாய்களில் முறைகேடாக கழிவு நீர் இணைப்பு கொடுப்பதால் மழை நீர் வெளியேற முடியாமல் மழைக்காலங்களில் சாலைகளில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இதையடுத்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில் ஊராட்சி பணியாளர்கள் மூலம் நேற்று 50க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மழை நீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தொடரும். சட்ட விரோதமாக நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


