சென்னை: இலங்கையில் இருந்து 149 பயணிகளுடன் சென்னைக்கு தரையிறங்க வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பலத்த சூறைக்காற்று மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதேபோல் சென்னையில் தரையிறங்க வந்த டெல்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட சுமார் 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. அதன் பின்பு மழை சிறிது ஓய்ந்ததும் அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தாமதமாக தரையிறங்கின.
இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அபுதாபி, மஸ்கட், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, தூத்துக்குடி, ஷீரடி உள்ளிட்ட 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த விமானங்கள் திடீர் தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையாக தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படாத காரணத்தால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.