சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென பலத்த சூறைக்காற்று இடி, மின்னலுடன் மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியிலிருந்து, சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கத்தார் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 317 பயணிகளுடன் அதிகாலை 2.50 மணிக்கு, சென்னைக்கு தரையிறங்க வந்த கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, பெங்களூரு திரும்பிச் சென்றது.
அதேபோல், துபாய், சார்ஜா, லண்டன் விமானங்களும், வானில் வட்டமடித்து பறந்து விட்டு, அதன் பின்பு மழை ஓய்ந்ததும் சென்னையில் தரையிறங்கின. அதோடு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மொரீசியஸ், தாய்லாந்து, துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி, டெல்லி, கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த ஒரு மணி நேர மழையால் சென்னை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு விமானங்கள் மொத்தம் 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் தவிப்பு அடைந்தனர்.