சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் 6.10 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே குறுவை அறுவடை தொடங்கியுள்ளது. அதை கருத்தில் கொண்டு நெல் கொள்முதலும் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்பாக கடந்த செப்டம்பர் 1ம்தேதியிலிருந்தே தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளில் 25 சதவீதம் கூட கொள்முதல் செய்யப்படாதது தான் 4 லட்சம் மூட்டைகள் தேங்குவதற்கு காரணமாகும். ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளையே வைத்திருப்பதற்கு இடம் இல்லாததால் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement