Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேமிப்பு கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு வரும் பொருட்களின் அளவு குறைந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

திருவள்ளூர்: சேமிப்பு கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு வரும் பொருட்களின் அளவு குறைந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம் மற்றும் 40 கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தோம். கூட்டுறவுத் துறையினர், விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 2.4 கோடி குடும்ப அட்டைகளுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் கீழ் 1.05 கோடி குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறோம்.

மழைக்காலங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகளில் நெல் நனைந்து வீணாகாமல் தடுத்திட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஒப்பந்தம் போட தாமதமானதால் தற்போது போர்க்கால அடிப்படையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பருப்பு விநியோகம் முழுமை அடையும். அந்தோதியா திட்டத்தின் கீழ் 18.64 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோ அரிசி மிகவும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 3.1 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 2.8 லட்சம் குடும்ப அட்டைகள் தயார் செய்யப்பட்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டைகளை தொலைத்த 4.54 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நேரடி கொள்முதல் நிலையங்களை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கடன்களாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, வருகின்ற மாதங்களில் வழங்கப்பட உள்ளது. மேலும் 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ள நிலையில் 4,466 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகள் விரைவில் புதுப்பிக்கப்படும்.

ரேஷன் அரிசி கடத்தலில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், கோயம்புத்துார் போன்ற 13 மாவட்டங்கள் சவாலாக உள்ளன. ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 226 வழக்குகள் பதியப்பட்டு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 238 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சேமிப்பு கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு வரும் பொருட்களின் அளவு குறைபாடுகளுடன் தொடர்ந்து வந்தால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கௌசல்யா, துணைப்பதிவாளர் (பொது விநியோகம்) ரவி, சார்பதிவாளர்கள் விஜயவேலன், சண்முகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ஆடலரசு உட்பட பலர் உடனிருந்தனர்.