ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் ஈட்டலாம் என ரூ.62 லட்சம் மோசடி: கன்னியாகுமரியில் பதுங்கியவர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருடன், காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விக்னேஷ் மற்றும் இவரது மனைவி சிந்தியா, இவரது தங்கை சங்கீதா ஆகியோர், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம் என ராஜேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் தர் என்ற ஏஜென்ட் மூலம் வங்கியில் கடன் பெற்று தர நாங்கள் உதவி செய்கிறோம் எனவும் கூறியுள்ளனர். இவர்களை நம்பிய ராஜேஷ், சிறுக சிறுக 62 லட்ச ரூபாயை வரை வங்கியில் லோன் வாங்கி கொடுத்துள்ளார். ஒரு சில மாதங்களுக்கு மட்டும் 3 லட்ச ரூபாய் முதலீடுக்கான லாபத்தை கொடுத்துள்ளனர். அதன்பிறகு லாபத்தை கொடுக்காமலும் முழு பணத்தை கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் ராஜேஷ் கேட்டபோது, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள், எங்களால் பணம் தரமுடியாது மிரட்டியுள்ளனர். இதனால் தாலி சரடு மற்றும் செயின் போன்ற நகைகளை விற்று வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை செலுத்திவந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வங்கியில் பணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, வங்கியில் இருந்து வசூல் செய்ய வந்தவர்கள் பணம் கேட்டு ராஜேஷை டார்ச்சர் செய்துள்ளனர். இதையடுத்து விக்னேஷை சந்தித்த ராேஜஷ், என்னுடைய லோன் கணக்கை முடித்துவிடுமாறு கேட்டுள்ளார். அப்போது என்னால் கட்ட முடியாது. நீயும், உன் பொண்டாட்டியும் தூக்கு மாட்டி சாவுங்க என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேஷின் மனைவி அபிராமி, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித் துள்ளார். ஆனால் புகாரை முறையாக போலீசார் விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக் குள்ளான ராஜேஷின் மனைவி அபிராமி, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அபிராமியின் தாய் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அபிராமி, பண மோசடி குறித்த புகாரை போலீசார் முறையாக விசாரிக்க வில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பண மோசடி தொடர்பாக மீண்டும் விசா ரணை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து திருவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த விக்னேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.