ஏற்காடு : ஏற்காட்டில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையால், சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கும் ஏற்காட்டில், பலரது வீடுகளில் குழந்தைகளுக்கு நிகராக செல்ல பிராணியாக நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடும் இருப்பதோடு, வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக நாய்கள் விளங்குகின்றன.
முறையாக பராமரிக்கப்படுவதாலும், தடுப்பூசிகள் போடப்படுவதாலும், வளர்ப்பு நாய்களால் பெரும்பாலும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் தெருக்கள், சாலைகள், பூங்காக்களில் சுற்றித்திரியும் நாய்களால் சுற்றுலா பயணிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, முன்பு கருத்தடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்துச்சென்று, கருத்தடை செய்து ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தி, சிறிது காலம் பராமரித்து, பின்னர் பிடித்த இடத்திலேயே விட்டு விடுவார்கள். இதனால் நாய்களின் இனப்பெருக்கம் குறைந்தது.
இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படாததால், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்காட்டில் வீதிகள் தோறும் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 15 நாய்கள் வரை சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் வீதிகள், சாலையின் மைய பகுதியில் படுத்து கொள்வதால் டூவீலர், கார்களில் செல்வோர் விபத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
சாலைகளில் நடந்து செல்வோரை விரட்டி கடிக்கிறது. பல சமயங்களில் குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ள பகுதியில் உணவை தேடி அலையும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். காலை நேரத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, சாலைகளில் குறுக்கும், நெடுக்கும் நாய்கள் ஓடுவதால் பலரும் அலறியடித்து ஓடுகின்றனர்.
நாய்களிடம் கடி வாங்கி, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகனங்களில் செல்வோரையும் துரத்தி கடிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சில பகுதிகளில் உடலில் காயங்கள் மற்றும் புண்களுடன் நோய் தாக்கிய தெரு நாய்கள் சுற்றித்திரிவதால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது கால்நடைத்துறை சார்பில், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.