சென்னை: சென்னை தரமணியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக ஆராய்ச்சி பூங்காவில் நேற்று தமிழ்நாடு நிலப்பயன்பாடு 2025 சர்வதேச இரண்டு நாள் மாநாட்டை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பல்வேறு வகைப்பாடு உள்ள நிலங்களை எப்படி பயன்படுத்தலாம், எந்த நிலத்தினை பயன்படுத்துவது, எந்த நிலத்தினை பாதுகாப்பது என்ற புரிதலை கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல் நகரப் பகுதிகளில் வெப்பத்தை குறைக்கவும், பசுமை பரப்பை வளர்க்கவும் ஆராய்ச்சிகளும் ஆராய்ச்சிகள் தொடர்பான கருத்தரங்கங்களும் நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சிகளுடன் இணைந்து புறம்போக்கு இடங்களை சார்ந்த பறவைகளின் வாழ்வியல் மேம்படுத்துதல் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு பரிந்துரைத்துள்ளேன். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது.
இதேபோல ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. அங்கு அனைத்து கல்லூரியிலிருந்து ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும். இதை தொடர்ந்து கோயம்புத்தூரில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தொழில் முனைவோர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு நிலப்பயன்பாடு 2025 சர்வதேச மாநாட்டில், தமிழ்நாடு மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலாளர் சுதா ஐஎப் எஸ் உள்பட 180 பல்கலைக்கழகங்களை சார்ந்த 800க்கும் மேற்பட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.