இந்திய கடலோர காவல் படையில் கப்பல்-ரோந்து விமானங்களை அதிகரிக்க நடவடிக்கை: இயக்குனர் பரமேஸ் சிவமணி தகவல்
சென்னை: கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல் மாசடைவதை தடுப்பது தொடர்பான தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை பயிற்சி ஒத்திகை இந்திய கடலோர காவல் படையின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சௌரியா உள்ளிட்ட பல்வேறு கப்பல்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. சென்னை துறைமுகம் தொடங்கி 20 கிலோமீட்டர் வரை நடுக்கடலில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதன் பின்னர், நிருபர்களிடம் பேசிய இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் பரமேஸ் சிவமணி கூறுகையில், ‘‘எண்ணெய் மாசுவை சுத்திகரிக்க கோவா கப்பல் கட்டும் தளத்தில் இரு அதநவீன மாசு கட்டுப்பாட்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதில் ஒரு கப்பல் நடப்பாண்டுக்குள் கடலோர காவல் படையில் இணையும். மற்றொரு கப்பல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படையில் சேர்க்கப்படும். எண்ணெய் கசிவு விபத்து போன்ற சூழலில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. தற்போது இந்திய கடலோர காவல் படையில் 60 கப்பல்கள் மற்றும் 78 ரோந்து விமானங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ’’ என்றார். இந்த சந்திப்பின் போது இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனர் டோனி மைக்கேல், கிழக்கு மண்டல ஐ.ஜி., டி.எஸ். சைனி ஆகியோர் உடன் இருந்தனர்.