பாவூர்சத்திரம் அருகே கருமடையூரில் பாழடைந்து கிடக்கும் அரசு பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
*கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் அருகே கருமடையூரில் பாழடைந்து கிடக்கும் அரசு பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழப்பாவூர் பேரூராட்சி 3வது வார்டான கருமடையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.
இப்பள்ளி கடந்த 1916ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்தான் இப்பள்ளியை நிர்வகித்து வருகிறது. இந்த பள்ளியில் கருமடையூர், மூலக்கரையூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு அரசு சார்பில் காலை மற்றும் மதியம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் இப்பள்ளி போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால் ஆண்டுக்கு ஆண்டு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது இதனால் 5 ஆசிரியர்கள் பணியாற்றிய இப்பள்ளியில் தற்போது 2 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதி கிராமப்புற ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு இப்பள்ளி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் 3 வகுப்பறைகள் உள்ள கட்டிடம், போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. கருமடையூரை சுற்றி கீழப்பாவூர் பெரியகுளம் மூலம் பாசன வசதி பெறும் பல்லாயிரக்கணக்கான வயல்கள் உள்ளன.
கீழப்பாவூர் பெரிய குளத்தில் இருந்துதான் இப்பள்ளியின் மேல்புறமாக செல்லும் கால்வாய் வழியாகத்தான் ஏராளமான வயல்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது. கால்வாயில் செல்லும் தண்ணீர் இப்பள்ளி காம்பவுண்டுக்குள் புகுவதும் தொடர் கதையாகி வருகிறது. மேலும் மழை காலங்களில் கால்வாயில் செல்லக் கூடிய தண்ணீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடினால் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்து மாணவ- மாணவிகளின் படிப்பு பாழ்படும் சூழ்நிலை உள்ளது.
தற்போது மழை பெய்யாவிட்டாலும் கூட கால்வாயில் வரக்கூடிய தண்ணீர் பள்ளி வளாகத்திலும் புகுந்துள்ளது. இதனால் பள்ளி வளாகம் குட்டை போல் காட்சியளிக்கிறது. இங்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளியாக இல்லாமல் கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியாக மாறி விட்டது. இதனால் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
பள்ளியில் காலை மற்றும் மதியம் உணவு சாப்பிடும் குழந்தைகள் இங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடந்து சென்று தான் உணவு வாங்கி சாப்பிடும் நிலையில் உள்ளனர். மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரால் பள்ளி வளாகத்திற்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் குழந்தைகளின் உயிருக்கு எந்த நேரத்தில் ஆபத்து நேரிடலாம் என்ற நிலை உள்ளது. பள்ளி காம்பவுண்ட சுவர் முற்றிலும் சேதமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் சுவிட்ச் போர்டு கதவு இல்லாமல் ஆபத்தாக காணப்படுகிறது.
எனவே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் இப்பள்ளி விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி பள்ளி வளாகத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கலெக்டரும் இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.