Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாமக்கல்லில் ஆமை வேக பணியால் அவதி பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை

*ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சி பகுதியில் ரூ.200 கோடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென துணை மேயர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல் நகராட்சியாக இருந்த போது, கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது.

அந்த பகுதியில் ரூ.200 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பாதாள சாக்கடை அமைப்பை ஏற்படுத்தும் பணியில் 8 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மொத்தம் 218 கி.மீ., தூரத்திற்கு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை 87 கி.மீ., தூரத்திற்கு மட்டுமே பணிகள் முழுமை பெற்றுள்ளது.

பணிகள் எதிர்பார்த்தது போல வேகமாக நடைபெறவில்லை. இதனால், புதிய சாலைகள் அமைக்கும் பணிகளும் தாமதமாகிறது.பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபடும் நிறுவனத்தினர், சரியாக திட்டமிடாமல் ஆங்காங்கே பணிகளை செய்து வருவதால், குறிப்பிட்ட பகுதிகளில் பணிகள் நிறைவடைய மிகுந்த காலதாமதமாகிறது.

பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட பகுதியில் பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டுமென மாநகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் பூபதி தலைமையில் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் திலகவதி மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் மேலாளர்கள், கட்டுமான பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் துணை மேயர் பூபதி பேசுகையில், ‘பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வார்டில் பணிகளை தொடங்கும்போது, அங்கு பணிகளை முழுமையாக முடித்து விட்டு, அடுத்த வார்டு தெருவில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்கு சாலைகளில் குழிகளை தோண்டும்போது, அங்குள்ள குடிநீர் இணைப்பு குழாய் உடைந்தால், அதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அலுவலர் களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அந்த பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்று பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். மழை காலம் துவங்க உள்ளதால், ஏற்கனவே துவங்கப்பட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும்.

பணிகளின் முன்னேற்றம் குறித்து தினமும், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்,’ என்றார். கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், சரவணன், தேவராஜன், நந்தகுமார், தனசேகரன், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, இளம்பரிதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.