ஜெருசலேம்: ஸ்டீப்பிள் சேஸ் 2000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா தியானி புதிய தேசிய சாதனை படைத்தார். ஜெருசலேம் நகரில் கிராண்ட் ஸ்லாம் சர்வதேச தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் ஒன்றான, ஸ்டீப்பிள் சேஸ் 2000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா தியானி (23), 6:13.92 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு, போட்டியில் முதலிடத்தையும் பிடித்தார்.
இஸ்ரேலை சேர்ந்த அத்வா கோஹென் 6:15.20 நிமிடங்களில் கடந்து 2வது இடத்தையும், டென்மார்க்கின் ஜூலியன் ஹிவிட் 6:17.80 நிமிடத்தில் கடந்து 3வது இடத்தையும் பிடித்தனர். ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் இதற்கு முன், இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 6:14.38 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது அங்கிதா தியானி முறியடித்துள்ளார். கடந்த மாதம், ஜெர்மனியில் நடந்த 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் பங்கேற்ற அங்கிதா வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.