Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

சென்னை: மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (14.10.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளான "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு", "நான் முதல்வன் திட்டத்தின் மதிப்பீட்டாய்வு", "தமிழ்நாட்டில் புத்தொழில் துவக்கத்திற்கான சுற்றுச்சூழல் அமைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்", "தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக் கொள்கை மற்றும் "தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை" ஆகியவற்றை துணை முதலமைச்சரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

மாநில திட்ட குழுவானது முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நலத் திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல் மற்றும் அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்ட குழு நல்கி வருகிறது.

முதலமைச்சர் அவர்களிடம் சமர்பித்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்களாவன:

* கலைஞர் மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தாக்க மதிப்பீடு தமிழ்நாடு மாநில திட்டக் குழு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தாக்க மதிப்பீட்டு ஆய்வினை மேற்கொண்டது. பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வில் இத்திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும். கிராம மற்றும் நகர்புறத்தில் வாழும் 10,311-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்ததில், இத்திட்டத்தின் செயல்பாடு, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரை சென்றடைந்துள்ளதை இவ்வாய்வானது கண்டறிந்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் (KMUT) மூலம் வழங்கப்படும் தொகையினை பயனாளிகள் பெரும்பாலும் மருத்துவச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துகின்றனர், அதில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி தரமான உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வு செலவுக்காக பயன்படுத்துகின்றனர் என கண்டறியப்பட்டது. இதன் மூலம் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களின் மேம்பாட்டிற்கான காரணியாக செயல்பட்டு, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, குடும்பத்தில் பெண்களின் மதிப்பை வலுப்படுத்துகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெறும் தொகையை பெண்கள், தாமாகவே முடிவெடுத்து தங்களது குடும்ப செலவுகளுக்காக பயன்படுத்துகின்றனர். பயனாளிகளில் கணிசமானோர், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார முடிவுகளில் தங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

* நான் முதல்வன்” திட்டத்தின் மதிப்பீட்டாய்வு

“நான் முதல்வன்” திட்டமானது தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு முன்னோடி திட்டமாகும். மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை கற்பித்து வேலைவாய்ப்பு பெற்றிடவும், கல்வி கற்றல் மற்றும் தொழில் துறைகளின் தேவைகளுக்கிடையேவுள்ள இடைவெளியை குறைப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

மாநில திட்டக் குழுவால், “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படும் பொறியியல் மற்றும் பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் (Polytechnic Colleges) பயிலும் மாணவர்களிடம் இத்திட்டத்தின் மதிப்பீட்டாய்வு டிசம்பர் 2024 முதல் மே 2025 வரை மேற்கொள்ளப்பட்டது. 52 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 72 பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 9000 மாணவ மாணவிகளிடம் இத்திட்டம் குறித்து கேட்டறியப்பட்டது. தொழில் நிறுவனங்களின் தேவைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான தொழில்நுட்ப திறன்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விரிவாக மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கண்ட ஆய்வில், 75 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தேவையான நடைமுறை, சுய விவரங்கள் தயாரிப்பு மற்றும் தொழில் சார்ந்த திறன்களை பெற்றுள்ளதால், தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தேர்வுகளை, நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்களுக்கு அளிக்கப்பட்ட சமமான தொழில் சார்ந்த திறன் பயிற்சிகளால் வேலைவாய்ப்பு திறன் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாய்வு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் துறை நிறுவனங்களின் கண்ணோட்டத்தினையும் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி கல்லூரி முடித்து துவக்க நிலையில் பணியில் சேரும் மாணவர்களின் தொழில் கற்றல் திறன் “நான் முதல்வன்” திட்டத்தின் காரணமாக மேம்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தொலைதூர பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமங்களை களையும் வகையில் உள்ளூர் கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஊரக பகுதியில் உள்ள பயிற்றுனர்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் தேவையினை இவ்வறிக்கை வலியுறுத்துக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த திறன் பயிற்சியினை அளித்திட ஊரகப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் மின்னணு கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணவர்களுக்கான மானியம், பயிற்றுனர்களின் திறன் இணைய வழி அட்டவணைப்படுத்துதலை (Cloud based platform for Schedule) மேம்படுத்துதல் தொடர்பான பரிந்துரைகளையும் மதிப்பீட்டாய்வு அறிக்கை வழங்கியுள்ளது.

* தமிழ்நாட்டில் புத்தொழில் துவக்கத்திற்கான - சுற்றுச்சூழல் அமைப்பு: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்

தமிழ்நாடு 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடித்தளமாக புத்தொழில்களின் வளர்ச்சிக்கான சுற்றுச்சூழல் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது மாநிலம் தேசிய அளவில் புத்தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும், புத்தொழிலின் வளர்ச்சிக்கென விரிவான புதுமை கொள்கைகளுடன் 12 முக்கிய துறை வாரியான கொள்கைகளின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு, மின் வாகன உற்பத்தி மற்றும் உயரிய தொழில்நுட்பவியல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் போன்ற துறைகளில் புத்தொழில் துவக்கத்திற்கான முக்கிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உள்கட்டமைப்பு, மனித மூலதனம், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் அரசு-கல்வி கூட்டாண்மைகள் மூலம் வழிகாட்டுதல் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் புத்தொழில் வளர்ச்சிக்கான தனித்துவமான கொள்கையானது கேரளா, குஜராத், கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் கொள்கைகளை காட்டிலும் விரிவானது. தமிழ்நாடு அரசின் முக்கியக் கொள்கையான சமநிகர் வளர்ச்சியினை உறுதி செய்யும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமமான தொழில் வளர்ச்சிக்கு வலுவான முக்கியத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புத்தொழில் நிறுவனர்களில் பெரும்பாலும் அரசு உயர்கல்வி நிறுவனங்களில் படித்த நடுத்தர வயது பொறியாளர்கள் மிகுதி, அதிலும், பெண்கள் ஆண்களை விட இளைய வயதில் புத்தொழில்களை தொடங்குபவர்களாக விளங்குகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொழில் வளர் காப்பகங்கள் பல தனியார் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களாலும் மற்றும் அரசின் நிதி ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. ஆதரவுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, நிதியுதவிக்கான அணுகல் ஆகியவை முக்கிய சவால்களாக விளங்குகிறது. துறை ஏற்றத்தாழ்வுகள் (sectoral challenges) மற்றும் நிலைத்தன்மையை அளவிடுதல் ஆகியவையும் முக்கிய சவால்களாக உள்ளன.

தமிழ்நாட்டில் புத்தொழில்கள் தொடக்கத்திற்கான சுற்றுச்சூழல் அமைப்பு StartupTN என்னும் இயக்கத்தின் மூலம் வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால், அதன் திறனை முழுமையாக செயல்படுத்த நமது மாநிலம் அதற்கென போதிய விழிப்புணர்வு மற்றும் ஆதரவுத் திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்தி நிதி செயல்முறைகளை எளிதாக்க வேண்டும், பாலினம் மற்றும் துறை ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து நீடித்த நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் துறை சார்ந்த திறன்களின் அடிப்படையில் புத்தொழில்கான யுக்திகளை வகுத்தல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

* தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதிக் கொள்கை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கை தமிழ்நாடு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக் கொள்கையானது மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நீடித்த அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மற்றும் மலிவு விலையில் பெறத்தக்க வீட்டு வசதிக்கான அவசரத் தேவையைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், பெருகி வரும் குடியிருப்புத் தேவைகளை நிறைவுச் செய்ய சமமான நில விநியோகம், நிதியுதவி மற்றும் தனியார்த்துறைகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் இன்றியமையாமையை இக்கொள்கை கோடிட்டுக் காட்டுகிறது.

இக்கொள்கை, சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினை நோக்கமாக கொண்டு எளிதில் பெறத்தக்க மற்றும் தரமான வீட்டுவசதியை முன்வைக்கிறது. மேலும், அனைத்து வருமான பிரிவினரும் பெறத்தக்க வீட்டுவசதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை, நீடித்த நிலையான கிராம நகர்ப்புற இணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கென தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கான முயற்சிகளுக்கும் வழிகாட்டுகிறது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகரிய மேம்பாட்டுக் கொள்கையானது, அனைத்து நகர்ப்புற வசதிகளுடன் கூடிய நன்கு திட்டமிடப்பட்ட, வளங்குன்றா நகரியங்களை உருவாக்க தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் தரங்களை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கையானது பணிக்கான பயண தேவையைக் குறைக்கும் வகையிலும், “பணியிடத்திற்கு நடந்து செல்லுதல்” என்ற கருத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

மேலும், குடியிருப்பு, வணிக, கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான உட்கட்டமைப்பு, பயன்பாடுகள், திறந்தவெளி பசுமையிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், இக்கொள்கை, நகர்ப்புற விரிவாக்கத்தில் ஏற்படும் இடர்களை நீக்குதல், மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய தொலைநோக்கு பார்வையைக் கொண்டு வடிவமைக்கப்ட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் எஸ். சுதா. ஆகியோர் உடனிருந்தனர்.