சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்று, பாராட்டியுள்ளது. இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா. தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பட்டியலில் இருந்து கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும், சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை உள்ளடங்கிய கல்வியை தாய் மொழியில் அளிப்பதுமே ஒரு நாட்டின் மகத்தான சமுதாய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒரு காலத்தில் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. இந்த உரிமையை மாற்றி ஒன்றியப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதால் மாநிலத்துக்கான கல்வி உரிமை பறிபோனது. இந்நிலையில்தான் மாநிலத்துக்கென தனிக் கல்விக் கொள்கையை வகுத்து பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்குகிறது.
தேசிய கல்விக் கொள்கையில் குலக்கல்வி முறையை கற்பித்தலை பாடத்திட்டத்தில் புகுத்துவதும், தொடக்க கல்வி நிலையில் 3, 5, மற்றும் 8ம் வகுப்பில் கட்டாயத் தேர்வு என்பதும் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆனால் மாநிலக் கல்விக் கொள்கையில் அத்தகைய நிலை இல்லை. அதேநேரத்தில் 5 வயதில் முதல் வகுப்பு சேர்க்கை, 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து, செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு சேர்க்கை, ஆங்கிலத் திறன் பயிற்சி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என்ற இருமொழிக் கொள்கை, என்று மாநில கல்விக் கொள்கையின் அம்சங்கள், முதல் தலைமுறை கல்வி கற்கும் அரசு மற்றும் நிதி நாடும் பள்ளிகளில் கல்வியில் ஏற்றத் தாழ்வை நீக்கும் வகையில் கல்வி கலைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல்கலை கற்பித்தல் முறைகளால் கற்றல் குறைபாடுகளை நீக்குவதற்கான கால அளவுகள் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
மாநிலக் கல்விக் கொள்கையில் பகுத்தறிவு சிந்தனையிலும், அறிவியல் தொழில் நுட்ப தொலை நோக்கு சிந்தனையை உணர்த்தும் வகையில் இடம்பெற்றிருப்புது வரவேற்கத்தக்கது. இத்தகைய கல்விக் ெகாள்கையை வெளியிட்டதன் மூலம் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் மாணவ மாணவியருக்கான பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புகளை உத்தரவாதப்படுத்தியுள்ள கல்விக் கொள்கையில், ஆசிரியர்கள் பணியில் இருந்த ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கானதையும் உறுதி செய்து இந்த கல்விக் ெகாள்கையை மேலும் வலுப்பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா. தாஸ் தெரிவித்துள்ளார்.