Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எளியோரும் ஏற்றம் பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த கல்வியாளருமான மறைந்த முனைவர் வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது:வாழ்நாள் முழுக்க எளிய மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் பாடுபட்டவர்தான் அறவழிப் போராளி மறைந்த முனைவர் வசந்திதேவி அம்மையார். கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிற ஆயுதமாவோ இல்லாமல்-ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும்; கல்விதான் அவர்களுக்கான ஆயுதம், அதுதான் அழிக்கமுடியாத செல்வம் என்கின்ற நோக்கத்தோடு தொடர்ந்து செயலாற்றி, அதற்கான இயக்கங்களை முன்னெடுத்தவர் வசந்திதேவி. தான் பணியாற்றிய கல்லூரிகள் தொடங்கி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி வரை, சிறந்த கல்வியாளராக, தனி முத்திரை பதித்தவர் வசந்திதேவி.

கல்வியில் சீர்திருத்தத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியவர். பொதுவுடைமைச் சிந்தனையும் மனித உரிமைக் கொள்கையும் கொண்ட அவர், மாநில மகளிர் ஆணையப் பொறுப்பில் இருந்தபோது ஆற்றிய பணிகள் சிறப்பானவை. தன்னுடைய பணிக்காலத்திற்குப் பிறகும் முற்போக்கு இயக்கங்களோடு சேர்ந்து நின்று, கல்வி உரிமைக்காகவும் மனித உரிமைக்காகவும் ஜனநாயகக் களத்தில் அயராமல் பாடுபட்ட அம்மையார், கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவர். நம் திராவிட மாடல் அரசின் பள்ளிக்கல்வி முன்னெடுப்புகளையும் மனமார பாராட்டியவர்.

கல்வியாளர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை செயல்வடிவமாக்கி, மாணவர்களை உயர்த்துவதில் உறுதியான நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகின்ற திராவிட மாடல் அரசு, எளியோரும் ஏற்றம் பெறும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. வசந்திதேவி அம்மையாரின் நினைவைப் போற்றும் இந்த நேரத்தில், அனைவருக்குமான கல்வி உரிமையை நிலைநாட்டுகின்ற திராவிட மாடல் அரசினுடைய செயல்பாடுகள் அனைத்தும் அம்மையாருக்கு செலுத்துகின்ற ஆக்கப்பூர்வமான அஞ்சலி என்று கூறி, வசந்திதேவிக்கு என்னுடைய புகழஞ்சலியை செலுத்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, வழக்கறிஞர் ஹென்றி திபேன், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், ஏஐடி இந்தியா, அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், கல்விக்கான அடிப்படை உரிமைக்கான தமிழ்நாடு கூட்டணி, அறப்போர் இயக்கம், சமகல்வி இயக்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.