Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்பு நிதியாண்டில் திருச்சி, கோவையில் ஸ்டார்ட்அப் மையம்

சென்னை: ஸ்டார்ட்அப் டி.என் நிர்வாக இயக்குநர் சிவராஜா ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு ஆதார மானிய நிதி திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் புத்தொழில்கள் பயன்பெறும்.

நடப்பு நிதி ஆண்டில் திருச்சி மற்றும் கோவை நகரங்களில் புதிய வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்படும். மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வட்டார புத்தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர சென்னை மெட்ரோ மையம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், சந்தை வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்க்காகவும் இந்த மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதுதவிர, புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான தொழில் நயம் என்ற நவீன வடிவமைப்பு உதவி மையம் (StartupTN) சென்னை மெட்ரோ மையத்தில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.