Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது: டிச.3ம் தேதி 2,668 அடி உயர மலை மீது மகாதீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து காலை 6.25 மணியளவில் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர்.

தீபத்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மூன்றாம் பிரகாரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர், கோயில் ஆணையர் பரணிதரன், தக்கார் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் வரும் 29ம் தேதியும், மகா தேரோட்டம் வரும் 30ம் தேதியும் நடைபெறும். விழாவின் நிறைவாக, டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும்.

அதைத்ெதாடர்ந்து, அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோ நெய், செப்பு கொப்பரை, ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்படும். தீபத்திருவிழாவில், இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக 5,484 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக ரயில்களுடன் கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.