Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்டேன் சுவாமி மரணத்தில் சுதந்திரமான விசாரணை: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

வாஷிங்டன்: மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மரணத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த இந்தியாவை வலியுறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் எம்பிக்கள் ஜூவான் வர்காஸ், ஜிம் மெக்கோவர்ன், ஆண்ட்ரே கார்சன் ஆகியோர் கொண்டு வந்த தீர்மானத்தில், ‘‘மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி கைது, 84 வயதில் சிறையிலேயே மரணம் அடைந்தது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த இந்தியாவை வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமை பாதுகாவலர்கள், அரசியல் எதிரிகளை குறிவைத்து தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. எனவே காலனித்துவ சட்டமான தேசத்துரோக சட்டத்தின் தற்காலிக நீக்கத்தை இந்திய நாடாளுமன்றம் நிரந்தரமாக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 19ல் கூறப்பட்ட மற்றும் 1948ல் ஐநா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துச் சுதந்திரம் அடிப்படை மனித உரிமை என்பதை இந்திய அரசாங்கத்திற்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசுகளுக்கும் இந்த தீர்மானம் தெளிவுபடுத்துகிறது’’ என கூறப்பட்டுள்ளது.