ஸ்டான்லி முன்னாள் டாக்டர் சாந்தகுமார் முன்னிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை ஸ்டான்லி மருத்துவமனை முன்னாள் டாக்டர் சாந்தகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பிரபல ரவுடியாக இருந்தவர் நாகேந்திரன். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையடுத்து, தன்னுடைய கணவரை விஷம் வைத்து காவல்துறை கொன்று விட்டதாக கூறி அவருடைய உடலை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நாகேந்திரன் உடலை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் டாக்டர் சாந்தகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். பரிசோதனை முடிவில் மாதிரிகளை பத்திரப்படுத்தி தடைய அறிவியல் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.