நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் 185 முகாம்களில் 2.60 லட்சம் பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 185 முகாம்கள் நடத்தப்பட்டு 2,60,910 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த, “நலம் காக்கும் ஸ்டாலின்“ மருத்துவ முகாமில், மக்களுக்கான இசிஜி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் மீது அக்கறை கொண்டு தொடர்ச்சியாக சீர்மிகு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்தவகையிலான ஒரு சிறப்பு திட்டம் “நலம் காக்கும் ஸ்டாலின்“ எனும் திட்டம். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த முகாம்களை பொறுத்தவரை தற்போது 6வது வாரமாக நடந்து வருகிறது. 5வது கட்டமாக நடந்த முகாம்களின் எண்ணிக்கை 185, இதில் மருத்துவ பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை 2,60,910 பேர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் நேற்று 38 முகாம்கள் நடத்தப்பட்டது.
ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள 5 கட்ட முகாம்களில் 11,240 பேர் காப்பீடு திட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அட்டைகளை பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல் 5 கட்ட முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் 11,290 பேர் பெற்றிருக்கிறார்கள். கருவில் உள்ள பாலினம் தெரிவிக்க கூடாது என்பதில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் இந்த மாதிரியாக செயல்களை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசு ஊழியாராக இருந்தால் விதிமுறைகளின்படி துறை ரீதியான நடவடிக்கை, சட்ட நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும். சொத்துகளை முடக்குவது என்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் இல்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் உள்பட பலர் பங்கேற்றனர்.