உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் குறித்து ஆய்வு மகளிர் உரிமைத்தொகை கோரி 17 லட்சம் பேர் விண்ணப்பம்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள் குறித்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அரசு சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை தொடங்கி வைத்தார். இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்தன. இதுவரை சுமார் 4,600 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ திட்டத்திற்கு தமிழ்நாட்டினுடைய அனைத்து மாவட்டத்திலும் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நான் எனது சேப்பாக்கம் தொகுதியில் நான்கு முகாம்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, கலந்து பேசி என்னென்ன தேவைகள் மற்றும் குறைகள் இருக்கிறது என்று கேட்டறிந்தேன். பல நேரங்களில் முகாம்களிலே மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் என்ன கேட்டு வந்திருக்கிறார்களோ அந்த சான்றிதழ்களை உடனுக்குடன் கொடுத்திருக்கிறோம். ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்’ மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன. அதுதவிர, முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருக்கிறது. இந்த மனுக்களையெல்லாம் காகிதமாக பார்க்காமல், பொதுமக்களுடைய வாழ்க்கையாக, தனிமனிதனுடைய வாழ்க்கையாக நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும். அரசை நம்பி பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நாம் முடிந்த அளவிற்கு வெகு விரைவாக தீர்த்து வைக்க வேண்டும்.
தீர்வு காண இயலாத மனுக்களுக்கு அலுவலர்கள் எதற்காக தீர்வு காண இயலவில்லை என்ற காரணத்தை முறையாக பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக, மனுக்களுக்கு அரசு தரப்பிலிருந்து விளக்கங்கள் தருவதை விடுத்து நாம் இயன்ற அளவு தீர்வுகள் தரவேண்டும் என்பதே முதல்வரின் ஒரே எண்ணம், ஒரே நோக்கமாகும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வு கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா மற்றும் தொடர்புடைய அரசு கூடுதல் தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.