சென்னை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், அசோக்நகர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இதுவரை 484 முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 7,57,168 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 1, 256 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், சென்னைக்கு அடுத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் என்கின்ற அளவிலும், தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாரங்களில் தலா 3 என்கின்ற வகையிலும் ஆக ஒட்டு மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இதுவரை 484 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம் நேற்று 14வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் 39 இடங்களில் நடைபெற்று ஆக மொத்தம் 523 முகாம்களாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement

