உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; சென்னையில் நடந்த முகாமை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்: மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களின் கீழ் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் இன்று தொடங்கி வைத்தார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக இன்று முதல் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில், சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகாவீர் ஜெயின் பவன் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற முகாமினை பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார். நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இணை ஆணையர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையர்கள் பிரதிவிராஜ், எச்.ஆர்.கௌஷிக், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.