‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த வழக்கு அதிமுகவுக்கு சம்மட்டி அடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது: எடப்பாடி இனிமேலாவது திருந்த வேண்டும், ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அறிமுகம் செய்த உடன் புதிதாக ஏதோ கண்டுபிடித்தது போலவும், புதிதாக ஞானோதயம் வந்தது போலவும் சி.வி.சண்முகத்தை ைவத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் திட்டம் வைக்க கூடாது என எடப்பாடி வழக்கு போட செய்துள்ளார். ஆனால் உண்மையை யாரும் மறைத்து விட முடியாது.
இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அல்ல. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு. அவர்கள் அனைவரது பெயரிலும் உள்ள திட்டங்களை நீக்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இவர்களுக்கு எதிராக அதிமுக இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதை எதிர்த்து தான் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்து இருந்தோம்.
அவர்களை போன்று கேவலமான அரசியலை செய்யக் கூடாது என அதிமுகவுக்கு சம்மட்டி அடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. லட்சக்கணக்கான மக்களை அரசு அதிகாரிகள் சந்திப்பது எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை. தற்போது அது நடைபெறுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிமுக இதை செய்துள்ளது. அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. ஜெயலலிதாவிற்கு அனைத்தையும் செய்தது திமுக தான். ஜெயலலிதா பெயரில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதையும் நீதிமன்றம் சென்று ஒப்புதல் பெற்றது திமுக தான். எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். பாஜகவிடம், அதிமுக கட்சியை அடமானம் வைத்து விட்டனர். பிரதமர் மோடியோ, காந்தி, நேரு பெயரில் திட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என யார் பெயரையும் சொல்லக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார்.