சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், என்னென்ன தேவைகளுக்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலமாக நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகள் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின்கட்டண ரசீது ஆகிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகைக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் குடும்பத்தினர், 5 ஏக்கருக்கும் குறைவான நன்செய், 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பத்தினர், ஆண்டிற்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரே குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது.
அரசின் உதவித் தொகை, முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியம் பெறுவோரை தவிர, அக்குடும்பத்தில் உள்ள மற்ற தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி மன்ற உறுப்பினர்களை தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகள் உள்ள குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது. அரசு, பொதுத்துறை, வங்கி வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்களோ, ஓய்வூதியதாரர்களோ விண்ணப்பிக்க முடியாது. அதிசமயம் அரசு மானியம் பெற்று 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று ஓய்வூதியம் பெறுவோர் தவிர, அந்த குடும்பத்தில் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நகர்ப்புறங்களில் நடைபெறும் முகாம்களில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி ஆதரவு திட்டம், கட்டட வரைபட திட்ட அனுமதி, கலைஞர் கைவினை திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக இணைவது, மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
இதேபோல ஊரக பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன், பட்டா மாறுதல், வேளாண் இடுபொருட்கள், எந்திரங்களை மானிய விலையில் பெறுவது, சிறு, குறு விவசாயக் கடன், கட்டட வரைபடத் திட்ட அனுமதி, கலைஞர் கைவினை திட்டம், கடல்சார் கல்விக்கான உதவித்தொகை, 50% மானியத்தில் மீன்பிடி உபகரணங்களை வழங்குதல், அலங்கார மீன் வளர்ப்பு, தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, நலவாரியங்களில் உறுப்பினராக இணைவது, நாட்டுக் கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.