Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

'உங்களுடன் ஸ்டாலின்'.. 7.23 லட்சம் மனுக்களை தீர்வு: பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உரிய கால கட்டத்திற்குள் தீர்வு காணப்படுவதை கண்காணித்திடவும் துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது, இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளில் வரப்பெற்ற 14,54,517 மனுக்களில், 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், தீர்வு செய்யப்பட்ட மனுக்களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இது தீர்வுசெய்யப்பட்ட மனுக்களில் 83% ஆகும் என்று முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் அவர்கள், தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், குறிப்பாக, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கியத் துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்திட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறையில் சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வேளாண்மைத் துறையில், விவசாய பெருமக்களின் தேவைகளான இடுபொருட்கள், விவசாய இயந்திரங்கள் தொடர்பான மனுக்களின் மீது அதிக கவனம் செலுத்தி, விவசாய பெருமக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா சம்பந்தமான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முகாம்கள் நடைபெற்றபோது மக்கள் தெரிவித்த கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, தெருவிளக்கு, இணைப்பு சாலை, குடிநீர் போன்ற சமுதாய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொறுத்தவரை மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விடுதலின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக அனைத்து அரசு துறைச் செயலாளர்களிடமும், மாவட்ட ஆட்சியர்களிடமும் தலைமைச் செயலாளர் அவர்கள் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை ஒருங்கிணைத்து, மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட வழிகாட்டுதலின்படி, வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை சிரத்தையுடன் கண்காணிக்கவும், பெறப்படும் மனுக்களின் மீது உரிய கால கெடுவிற்குள் சரியான தீர்வினை வழங்குவதை உறுதி செய்யவும், அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., முதல்வரின் முகவரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் / சிறப்பு அலுவலர் பெ. அமுதா, இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்திட - இன்னும் விரைவாகத் தீர்வுகளை அளித்திட, துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.

இந்தத் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.