*அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
*9 ஆயிரத்து 828 மீது மனுக்கள் மீது நடவடிக்கை
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 3 கட்டமாக நடைபெற்றுள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கான 6 ஆயிரத்து 234 விண்ணப்பங்கள் உட்பட மொத்தம் 9 ஆயிரத்து 828 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இம்முகாமை அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின்என்ற திட்டத்தனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ந் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்துஅனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த திட்டமானது மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் 2 மற்றும் 3ம் கட்டமாக இந்த முகாமானது நடைபெற்றுள்ள நிலையில் இன்று (26ந் தேதி) 4ம் கட்டமாக திருவாரூர் நகராட்சி பகுதிக்கு கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
இதேபோல் திருவாரூர் வட்டாரத்திற்கு மாங்குடி சுந்தரம்மஹால், வலங்கைமான் வட்டாரத்திற்கு கோவிந்தக்குடி யூ.ஆர்.மஹால், மன்னார்குடி வட்டாரத்திற்கு மேலவாசல் சமுதாயகூடம் மற்றும் கோட்டூர் வட்டாரத்திற்கு கோட்டூர் சன்முகா திருமண மண்டபத்திலும் இந்த முகாமானது நடைபெறுகிறது. மேலும் இந்த முகாமானது வரும் அக்டோபர் மாதம் வரையில் நகர்புறப் பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதுடன் இதுதொடர்பான தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனர். மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிருக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மேலும் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களில் உடனடியாக சான்று வழங்கும் வகையில் ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, முதல்பட்டதாரி சான்று, மின்இணைப்பு பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கலெக்டர் மோகனசந்திரன், எம்.எல்.ஏக்கள் பூண்டிகலைவாணன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வையில் உடனடி தீர்வு காணப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 3 கட்டங்களாக இந்த முகாமானது நடைபெற்றுள்ள நிலையில் இதில் மகளிர் உரிமை தொகைக்கான 6 ஆயிரத்து 234 விண்ணப்பங்கள் உட்பட மொத்தம் 9 ஆயிரத்து 828 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி தீர்வாக 221 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், கோவில்வெண்ணி, ஆதனூர், நகர் ஆகிய மூன்று ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்காக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன்,
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் பார்வையிட்டு பெறப்பட்ட மனுக்களில் வருவாய்த்துறையின் சார்பில் 01 பயனாளிக்கு இருப்பிட சான்றிதழும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் 06 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பில் 02 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் வழங்கினார்கள்.நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், சுப்புலட்சுமி, வட்டாட்சியர் சரவணகுமார் மற்றும் அரசு அதிகாரிகள்,அலுவலர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.