ஸ்ரீவைகுண்டம் அருகே நயினார் நாகேந்திரன் மகன் 7 ஏக்கரில் கல்குவாரி: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு
ஸ்ரீவைகுண்டம்: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன், ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து பகுதியில் புதிய கல்குவாரி அமைக்க விண்ணப்பித்துள்ள நிலையில், நேற்று நடந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல்வேறு கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு 7.38 ஏக்கர் பரப்பளவில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைக்க பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகனும், தமிழக பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப்பிரிவின் அமைப்பாளருமான ஸ்ரீநயினார் பாலாஜி கடந்த 2021ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். துறை சார்ந்த ஆய்வு பணிகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று பேட்மாநகரத்தில் தூத்துக்குடி ஆர்டிஓ பிரபு தலைமையில் நடந்தது.
குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரன் சுந்தரலிங்கநகரை சேர்ந்த முத்துசெல்வன் பேசுகையில், ‘நயினார் பாலாஜி கல்குவாரி அமைப்பதற்கு அருகில் உள்ள ஊர், சோலார் நிறுவனம் உள்ளிட்ட 45 வகையான ஆவணங்களை மறைத்து விண்ணப்பித்துள்ளார். இந்த பகுதியில் தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளால் பல்வேறு பிரச்னைகளை இப்பகுதி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கால்நடைகளை வளர்க்க முடியவில்லை.
குடிநீரின் தன்மை மாறியுள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்றார். வழக்கறிஞர் முத்துராமன் பேசுகையில், ‘புதிய கல்குவாரி அமைய உள்ள பகுதியில் வண்டிப் பாதை இருப்பதும், நீரோடை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் இருந்ததற்கான தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய கல்குவாரி அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது’ என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசுகையில், ‘கல்குவாரி புலத்தில், தென்கிழக்கு பகுதியில் சோலார் மின் உற்பத்தி செய்து எடுத்துச் செல்லும் லைன் செல்கிறது. இது குவாரி புலத்திலிருந்து 294 மீட்டரில் செல்கிறது. சோலார் மின் உற்பத்தி செய்து எடுத்துச்செல்லும் லைன் 300 மீட்டர் இடைவெளி இல்லாததால், இந்திய மின்சாரச் சட்டம் 1956 பிரிவு 83(2) படி இந்த கல்குவாரிக்கு சட்டப்படி அனுமதி தரக் கூடாது. கல்குவாரி அமையும் புலத்தைச்சுற்றி 300 மீட்டர் சுற்றளவில், பல நிரந்தர, தற்காலிக வீடுகள் உள்ளன.
அருகில் வல்லநாடு மான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சிவகளை நாகரிகம், இந்த கல் குவாரி அமையும் பகுதியிலேயே இருப்பதால், அவை பாதிக்கப்படும். எனவே, கல்குவாரிக்கு அனுமதி தரக்கூடாது என்றார். தொடர்ந்து அவர் பேச முயற்சித்த போது குவாரி ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து மைக்கை பறித்து பேசவிடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய குவாரி அமைக்க இருப்பது குறித்து நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்தியாளர்களிடம் பதிலளிக்க மறுத்து விட்டார்.