ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பவித்ர உற்சவம்; உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பவித்ர உற்சவத்தையொட்டி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் நேற்றிரவு நெல்லளவு கண்டருளினார். நாளை தீர்த்தவாரி நடக்கிறது. பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி- புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 3ம் தேதி தொடங்கியது.
பவித்ரோத்சவத்தின் 7ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோயில் கொட்டாரத்தில் இரவு 7 மணிக்கு நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை(11ம் தேதி) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு சந்திர புஷ்கரணி குளக்கரைக்கு தீர்த்த பேரருடன் சேர்வார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 10 மணிக்கு தீர்த்தபேரர் புனித நீராடல் நடைபெறுகிறது.
பின்னர் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்வார். அங்கு பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொது ஜனசேவை நடைபெறும். பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். மறுநாள் பெரியபெருமாள் ரங்கநாதர் திருமேனிக்கு இந்தாண்டிற்கான 2வது தைலக்காப்பு நடைபெறும்.