கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு..!
சென்னை: காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 38 வருவாய் கிராமங்கள் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 38 வருவாய் கிராமங்களும் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15.07.2025 அன்று, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டுமன்னார்கோவில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி ஸ்ரீமுஷ்ணம் வட்டம் தனியாக பிரிக்கப்படும் முன்பு, ஒருங்கிணைந்த காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 161 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. அவற்றிலிருந்து மேற்கண்ட அரசாணையின் வாயிலாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம் ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களையும், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களுடன் 51 வருவாய் கிராமங்களை கொண்டு ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காவனூர் ஆகிய 2 குறுவட்டங்களுடன் புதியதாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


