சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகே “கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளார். அனுரகுமாராவின் இந்த பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது. மேலும் அவர் “இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம்.
அது இலங்கைக்கே சொந்தமாகும்“ என்று கூறியிருப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சேதாரம் இல்லாமல் திருப்பி வழங்கவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமை நிலை நாட்டப்படவும் ஒன்றிய அரசு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.