Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் 11 பேரை தாக்கி மீன்பிடி உபகரணம் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்த 11 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரூ.4 லட்சம் மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு(60). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல்(26), சுகுமார்(31), திருமுருகன்(31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்றுமுன்தினம் மதியம் 2மணியளவில் நம்பியார்நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரை கிழக்கே இரவு 8 மணியளவில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர் வந்து படகை சுற்றி வளைத்தனர். இரும்பு கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கி, ஒரு வெள்ளி செயின், ஒரு சுசுகி இஞ்சின், செல்போன் 1, ஜி.பி.எஸ் கருவி, லைட் பேட்டரி, வாக்கி டாக்கி ஆகியவற்றை பறித்து சென்றனர்.

நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்தவர் சசிக்குமார் (30). இவர், பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர்(28), சிவசங்கர்(25), கிருபா(29), கமலேஷ் (19) ஆகிய 4 பேருடன் நேற்றுமுன்தினம் நம்பியார் நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரை கிழக்கே இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள், சசிக்குமார் பைபர் படகை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி, சுசுகி இஞ்சின், ஜிபிஎஸ் கருவி, எக்கோ சவுண்டர், செல் 5, 500 கிலோ வலை ஆகியவற்றை பறித்த சென்றனர். கொள்ளையர்கள் பறித்து சென்ற மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.4 லட்சம். படுகாயமடைந்த 11 பேரும் நேற்று காலை திரும்பி சகிச்சை பெற்றனர்.இது குறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.