Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை கடற்கொள்ளையர் தொடர் அட்டூழியம் நாகை மீனவர்களை தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் பறிப்பு

நாகப்பட்டினம்: நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூரை சேர்ந்தவர் சண்முகம் (50). இவரது பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (61), மதுரைவீரன் (35) உள்பட 4 மீனவர்கள் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு செருதூரில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், பைபர் படகை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களை தாக்கினர். பின்னர் படகில் இருந்த 500 கிலோ வலை, வாக்கி டாக்கி, செல்போன், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். இதுபற்றி நேற்று காலை செருதூர் திரும்பிய 4 மீனவர்களும் கீழையூர் கடலோர காவல் குழும போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

வேதாரண்யம்: இதேபோல வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவகிராமம் லயன்ஸ் நகரை சேர்ந்த சிவக்குமார்(40) தனது விசைப்படகில் சந்திரசேகரன்(40), ராஜகோபால்(50), அருண்குமார்(25), சுப்பிரமணியன்(55) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் மதியம் மீன் பிடிக்க சென்றார். வேதாரண்யம் கிழக்கே 16 நாட்டிகல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மீன் பிடிக்க வலையை விரித்து வைத்திருந்தனர். சில மணி நேரத்தில் பாதி வலையை காணவில்லை. பைபர் படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் 350 கிலோ எடையுள்ள வலையை வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம். இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்கொள்ளையரின் அட்டகாசம் தொடர்வதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை; 2 பேருக்கு சிறை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23ம் தேதி கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின், செல்வக்குமார் ஆகியோரின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். படகில் இருந்த 9 மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஷ்கரன் வழக்கை விசாரித்து, 7 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தார். விசைப்படகின் ஓட்டுநர் ஹரி கிருஷ்ணன் 2வது முறையாக கைதானதால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம், மற்றொரு ஓட்டுநர் சகாய ராபர்ட்டுக்கு ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.