கடந்த 2015ம் ஆண்டு வந்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி
சென்னை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வந்ததால், உயிர் பிழைக்கவும் வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலம் நமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் சகோதரர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இதற்கு முதல்படியாக, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்த, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் நமது இலங்கை தமிழ் சொந்தங்கள், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.