கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி 1999ல் அகழாய்வு நடத்தியதில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், செம்மணி அருகில் உள்ள நல்லூரில் மேம்பாட்டு பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை யாழ்ப்பாண நீதிமன்ற உத்தரவின்படி அந்த பகுதியில் அகழாய்வு பணி நடந்தது. கடந்த 10ம் தேதி அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதில் 65 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 2 எலும்பு கூடுகள் 4 மற்றும் 5 வயதுடைய 2 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணரான ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். இங்கு மேலும் பல மனித எலும்பு கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.