வேதாரண்யம் அக்.14: நாகப்பட்டினம் அருகே 21 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி படகுகளில் இருந்த ரூ.4லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, ராஜகோபால், தங்கநாதன், சுரேஷ், சகாதேவன் ஆகியோரின் 5 பைபர் படகுகளில் 21 மீனவர்கள் நேற்றுமுன்தினம் மதியம் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தூரத்தில் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு படகில் வந்த 3 இலங்கை கடல் கொள்ளையர்கள், 5 பைபர் படகுகளை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதோடு 21 மீனவர்களையும் தாக்கி படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள், 7 செல்போன்கள், ஜி.பி.எஸ். கருவி , 150 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.
இதில் லேசான காயத்துடன் 21 மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களால் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதுடன், மீன்பிடி உபகரணங்களை இழப்பதால் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.