இலங்கை சிறையில் உள்ளவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: வேலை நிறுத்தத்தால் 700 படகுகள் கரை நிறுத்தம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் வேலை நிறுத்தத்தால் 700 படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையினர் கடந்த 8ம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்து, நான்கு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அக்.27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் ஒட்டு மொத்த ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வேலையிழந்து ரூ.3 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.