துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் லீக் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்றது. நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. நுவான் துசாரா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முன்வரிசை வீரர்கள் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 12.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 79 ரன்னில் தத்தளித்தது. அடுத்து வந்த கேப்டன் ரஷித் கான், நபியுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.
ஸ்கோர் 114 ரன்னாக உயர்ந்த போது ரஷீத் கான் 24 ரன்னில் நுவான் துசாரா பந்தில் போல்டு ஆனார். அடுத்து 19, 20வது ஓவர்களில் நபி சூறாவளி ஆட்டம் ஆட குறிப்பாக இறுதி ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. நபி 22 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன் எடுத்து ரன் அவுட் ஆக, நூர் அகமது 6 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக நுவான் துசாரா 4 விக்கெட், சமீரா, வெல்லகே, சங்கா, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் குஷால் மெண்டிஸ் அட்டகாசமாக ஆடினார். இதனால் இலங்கை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 171 ரன் எடுத்து எளிதாக வென்றது. குஷால் மெண்டிஸ் 52 பந்தில் 74 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பெரேரா 28, அசலன்கா 17, கமிந்து மெண்டிஸ் 26 ரன்* (13 பந்து) எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறிது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில் குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.