இஸ்லாமாபாத்: பாதுகாப்பு அச்சம் காரணமாக, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில், நீதிமன்றத்தின் அருகே காவல்துறையின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினார். இதில் அந்த நபர் வெடித்து சிதறி உயிரிழந்தார். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனிடையே பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும், முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாடுகிறது. ராவல்பிண்டியில் நடை பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, 6 ரன்களில் வெற்றி பெற்றது. 2வது போட்டி இன்று நடைபெறவிருக்கும் நிலையில், 8 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தானுடனான தொடர் தொடர்ந்து நடைபெறும் என்றும், வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் பாகிஸ்தானிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும், அதையும் மீறி வீரர்கள் யாராவது நாடு திரும்பினால், அவர்களுக்குப் பதில் வேறு வீரர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.
