ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து 2வதாக அமையும் குலசேகரன்பட்டினத்தில் இருந்து 2027ம் ஆண்டில் ராக்கெட் ஏவப்படும்
*நெல்லையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
நெல்லை : ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து, குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் நாட்டின் 2வது ஏவுதளத்திலிருந்து 2027ம் ஆண்டில் ராக்கெட் ஏவப்படும் என நெல்லையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி இணைந்து கூட்டுத்திட்டத்தில் உருவான சர்வதேச விண்வெளி நிலையம், சீனாவின் தியாங்கோங் விண்வெளி நிலையம் ஆகியவை விண்வெளியில் செயல்பட்டு வருகின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முன்னோடியாக விண்வெளியில் மிர் நிலையத்தை (தற்போது செயல்பாட்டில் இல்லை) உருவாக்கிய ரஷ்யா தற்போது ‘ரஷ்யன் ஆர்பிட்டல் சர்வீஸ்’ நிலையத்தை விண்வெளியில் உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. அமெரிக்காவும் பிரத்யேக விண்வெளி நிலையத்தை அமைத்தது. ஆனால் அதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை.
பிரத்யேக விண்வெளி நிலையம் அமைக்கும் வல்லரசுகளின் போட்டியில் இந்தியாவும் இணைய உள்ளது. அதன்படி, பாரதிய அந்தரிக்ஷா நிலையம் (பிஏஎஸ்) என்ற பெயரில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை 2035ம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பாளையங்கோட்டையில் உள்ள கடற்படை செயற்கைக்கோள் தகவல் தொடர்பகத்திற்கு நேற்று வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
‘‘ககன்யான் திட்டம் என்பது நமது ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வரும் திட்டமாகும். இதற்கான ராக்கெட் தயாரிப்புப் பணிகள் மற்றும் வீரர்களுக்கான வெப்பம், அழுத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றைச் சமநிலையில் வைக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளன.
விண்வெளிப் பயணத்தின்போது ராக்கெட்டில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், வீரர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான ‘குரூ எஸ்கேப் சிஸ்டம்’ வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, ஆளில்லாத 3 ராக்கெட்டுகளைச் சோதனை ஓட்டமாக அனுப்ப உள்ளோம்; இதைத் தொடர்ந்து 2027ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
பிரதமரின் அறிவிப்புப்படி 2035க்குள் இந்திய விண்வெளி நிலையமானது விண்வெளியில் அமைக்கப்படும். மொத்தம் 5 மாட்யூல்கள் கொண்ட இதில், முதல் மாட்யூல் 2028ல் விண்ணில் ஏவப்படும். குலசேகரன்பட்டினம் ஏவுதளப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2027 தொடக்கத்தில் அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்.
இது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 2வது முக்கிய ஏவுதளமாக அமையும். நிலவில் இறங்கி அங்கிருந்து மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவரும் சந்திரயான்-4 திட்டத்திற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.


