Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை தமிழர் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்மந்தன் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம்: முத்தரசன் இரங்கல்

சென்னை: இலங்கை தமிழர் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்மந்தன் (91) நேற்று (30.06.2024) இரவு திரிகோணமலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியதாவது, இரா.சம்மந்தன் இலங்கை தமிழர்களின் சம உரிமைக்காக இடைவிடாது குரல் கொடுத்து வந்தவர். 1977 ஆம் ஆண்டில் திரிகோணமலை தொகுதியில் இருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பேரினவாத ஆட்சியாளர்களால் 1983 ஆம் ஆண்டில் தமிழர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நேரத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்தவர்.

இதனால் 1983 செப்டம்பர் 7 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இழந்தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2015 - 18 காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டவர். இலங்கை தமிழர் உரிமைகளுக்காக போராடிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர்களின் நன்மதிப்பை பெற்ற இரா.சம்மந்தன், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தமிழ் சகோதரர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.