விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக, 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி வருவதுடன், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷீப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்,
பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை 104 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலமாக 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்.
3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இப்பணி ஆணையினைப் பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர்.