Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ. மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ. மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியர் வளநூல் எனும் புத்தகத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் குறுவட்டம், மாவட்டம், மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கு 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் மொத்தம் 26 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான 46 வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 76 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 348 தங்கம், 236 வெள்ளி, 333 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 917 பதக்கங்களை வென்றுள்ளனர்.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 1,484 தங்கம், 1,522 வெள்ளி, 1,739 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 4,745 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (22.07.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த, சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்தம் 5,788 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பி.வி.பி. முத்துக்குமார், பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் பெ. குப்புசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ் உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.