சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட 10 விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்தார். 2023-24ம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு வளர்ச்சியினை தூண்டும் வகையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு, ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்” என பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கிராமத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்; திருப்பத்தூர் மாவட்டம் நிம்மியம்பட்டு கிராமத்தில், ரூ.3 கோடியில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்; திருப்பூர் மாவட்டம், சிவன்மலை கிராமத்தில் ரூ.3 கோடியில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்;
தென்காசி மாவட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில் ரூ.15 கோடியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம்; சென்னை - நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ.6.38 கோடி செலவில் 5 பாரா விளையாட்டு மைதானங்கள்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரூ.7 கோடியில் ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.