துபாய்: அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் புதிதாக இணைக்கப்படும் என தெரிகிறது. 4-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய நாடுகளின் டெஸ்ட் போட்டி முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2 ஆண்டு நடக்கும் போட்டியின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் 2027ல் துவங்கும் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு அடுக்கு முறை கொண்டு வரலாமா என்று ஆலோசிக்கப்பட்டு, இதுகுறித்து ஆராய நியூசிலாந்து முன்னாள் வீரர் ரோஜர் டிவோஸ் தலைமையில் ஒரு கமிட்டியை ஐசிசி அமைத்தது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகள் முதல் அடுக்கிலும், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அணிகள் 2-வது அடுக்கிலும் இடம் பெறும். இதில் முதல் அடுக்கில் இருக்கும் அணிகளுக்கே அதிகபடியான போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு ஆடும் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு வருமானமும் கணிசமாக உயரும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துபாயில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு அடுக்கு மாடலை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாடுகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த முயற்சித்து பார்க்கலாம். இதனால் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளுடன் விளையாடும் வாய்ப்பு அதிகமாகும் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு காரணமாக இரண்டு அடுக்கு டெஸ்ட் முறை திட்டத்தை ஐ.சி.சி. கைவிட முடிவு செய்துள்ளது. வரும் 2027-ம் ஆண்டில் தொடங்கும் 5-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே ஆடும் 9 அணிகளுடன் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளையும் சேர்க்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என தெரிகிறது.
