தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி.20 போட்டியில் இங்கிலாந்து 304 ரன் குவிப்பு: 146 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி
மான்செஸ்டர்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என தென்ஆப்ரிக்கா கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டி கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்கா வென்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 304 ரன் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பில்சால்ட் நாட் அவுட்டாக 60 பந்தில், 15 பவுண்டரி, 8 சிக்சருடன் 141 ரன் விளாசினார். பட்லர் 30 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரியுடன் 83, ஜேக்கப் பெத்தேல் 26, கேப்டன் ஹாரி புரூக் நாட் அவுட்டாக 21 பந்தில் 41 ரன் அடித்தனர்.
பின்னர் 305 ரன் என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா அணியில் கேப்டன் மார்க்ரம் 41, பிஜோர்ன் ஃபோர்டுயின் 32, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனோவன் ஃபெரீரா 23 ரன் அடித்தனர். 16.1 ஓவரில் 158 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. இதனால் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் சோப்ரா ஆர்ச்சர் 3, சாம்கரன், லியாம் டாசன், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். பில் சால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 1-1 என தொடர் சமனில் இருக்க கடைசி போட்டி நாட்டிங்காமில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
இங்கிலாந்து புதிய சாதனை...
டி.20 போட்டியில் நேற்று 304 ரன் குவித்த இங்கிலாந்து, ஐசிசியின் முழுநேர உறுப்பு நாடுகள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்றவை) அளவில் டி.20 போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியாவின் சாதனையை தகர்த்தது. இதற்கு முன் இந்தியா கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக 297/6 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டுமொத்த அளவில் ஜிம்பாப்வே கடந்த ஆண்டு காம்பியா நைரோபி அணிக்கு எதிராக 344/4 குவித்து டாப்பில் உள்ளது. அதற்கு அடுத்ததாக நேபாளம், மங்கோலியாவுக்கு எதிராக 314/3 ரன் குவித்து அடுத்த இடத்தில் உள்ளது.