இக்சான்: கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, வியட்நாம் வீராங்கனை குயென் துய் லின் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். தென் கொரியாவின் இக்சான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை குயென் துய் லின், கொரியா வீராங்கனை லீ ஸோ ஹீ மோதினர். முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய குயென், 21-12 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் சளைக்காமல் விட்டுக் கொடக்காமல் ஆடினர்.
கடைசியில் அந்த செட்டையும், 23-21 என்ற புள்ளிக் கணக்கில் குயென் கைப்பற்றி போட்டியில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம், அரை இறுதிக்கு அவர் முன்னேறினார். மற்றொரு போட்டியில் கொரியா வீராங்கனை சியு பின் சியான், ஜப்பான் வீராங்கனை அயகா டகாஹாஷி மோதினர். அந்த போட்டியில் துவக்கம் முதல் சியானின் கையே ஓங்கி காணப்பட்டது. முதல் செட்டை 21-10 என்ற புள்ளிக் கணக்கில் அசத்தலாக கைப்பற்றிய அவர், 2வது செட்டில் மேலும் ஆக்ரோஷமாக ஆடி, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிக்குள் நுழைந்தார்.

